கடும் வெயிலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை: ஆசிரியரின் செயலால் கிளம்பிய சர்ச்சை
பாடசாலையொன்றில் உள்ள மாணவர்களுக்கு வெயிலில் மண்டியிடும்படி தண்டனை வழங்கப்பட்ட சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு - நாரஹன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் உள்ள மாணவர்களுக்கே வெயிலில் மண்டியிடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, இது தொடர்பான காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பாடசாலை ஆசிரியை ஒருவரின் கட்டளைக்கு இணங்கவே மாணவர்கள் இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம்
மாணவர்கள் மண்டியிடும் இடத்தில் குறித்த ஆசிரியரும் நிற்பது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,
"இது போன்ற செயலை நான் ஏற்கவில்லை. மேலும், இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்
மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதன் தாக்கம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில், இது குறித்து அனைத்து பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி,மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது அதனை மீறி இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு செயலாகும்.
எனவே, கல்வி அதிகாரிகளால் இதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |