இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள முதலாவது புலனாய்வுப் படைப்பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கிரிதலே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமூன்றாவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தொடர்பான விசாரணைகளிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தம்பியன் என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர்
இராணுவ புலனாய்வுப் பிரிவினால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘தம்பியன்’ என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர் ஊடாக, சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலொன்றை நடத்தத் தயாராகி வருவதாகவும், வவுனதீவு காவல்துறை காவலரண் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சஹ்ரானே காரணம் எனவும் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்தத் தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, வவுனதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்னல் ரணவீர மற்றும் கிரிதலே இராணுவ புலனாய்வுப் படைப்பிரிவின் தலைவராக இருந்த கர்னல் மத்துமகே ஆகியோர் இந்தத் தகவல்களை புலனாய்வு பணிப்பாளரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கைத் தகவல்கள் உரிய முறையில் பகிரப்படவில்லை என குற்றச்சாட்டு 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் ‘ராசிக்’ என்ற உளவாளி வழங்கிய தகவல்கள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் ஏப்ரல் 3ஆம் திகதி வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் ஏப்ரல் 20ஆம் திகதி தேவாலயங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என கிடைத்த தகவல்கள் ஆகியவையும் முறையாகப் பரிமாறப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பதற்காக புலனாய்வுப் பிரிவின் குறிப்பிட்ட குழுவொன்று செயற்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
சாரா ஜாஸ்மின் இந்தியாவுக்கு
2014ஆம் ஆண்டு முதல் அரச புலனாய்வு சேவையின் (SIS) பயங்கரவாத குழுக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டார, சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ரில்வான் உள்ளிட்ட 94 பேரைக் கொண்ட பயங்கரவாத பட்டியலைத் தயாரித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு சென்ற அவர், சஹ்ரானின் சகோதரர் ரில்வானை சந்தித்து தேநீர் அருந்தி கலந்துரையாடியதாகவும், எனினும் அவரைக் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் ரில்வான் கைது செய்யப்பட்டிருந்தால், பின்னர் இடம்பெற்ற பேரழிவைத் தடுக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் சஹ்ரானின் உறவினர்கள் 16 பேர் உயிரிழந்தமை, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டமை, சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை ஆகியவற்றின் பின்னணியிலும் ஆழமான சதித்திட்டம் இருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |