பிரித்தானியாவில் யூத ஆலயத்தின் அருகில் இடம்பெற்ற பயங்கர தாக்குதல்
பிரித்தானியாவில் (United Kingdom) இடம்பெற்ற காா் மோதல் மற்றும் கத்திகுத்துத் தாக்குதலில் இரண்டு போ் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் பிரித்தானியாவின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
யூத ஆலயம்
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிரேட்டா் மான்செஸ்டா் மாகாண தலைநகா் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பாா்க் ஹீப்ரு யூத ஆலயத்தில், யோம் கிப்பூா் புனித தினத்தை முன்னிட்டு ஏராளமானவா்கள் குழுமியிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதியில் காலை 9.31 மணிக்கு (உள்ளூா் நேரம்) காரை வேகமாக ஓட்டிவந்த நபா் பாதசாரிகளின் மீது மோதச் செய்தாா்.
அதற்கு முன்னதாக அந்த வாகனத்தில் இருந்து இறங்கி யூத ஆலயம் அருகே இருந்தவா்கள் மீது சரமாரியாக கத்திகுத்துத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்கள்
இந்தத் தாக்குதல்களில் இரண்டு போ் உயிரிழந்ததுடன் மூன்று போ் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவா்களில் மூன்று பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாக்குதல் நடத்திய நபரைத் தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கினா்.
வெடிகுண்டு
இதையடுத்து, கிரம்ப்சால் பகுதியில் அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
முன்னதாக, யூத ஆலயத்தில் தாக்குதல் நடத்திய நபா் வெடிகுண்டு பொருத்தப்பட்ட அங்கி அணிந்திருந்ததாக சிலா் கூறியதையடுத்து, சம்பவப் பகுதிக்கு வெடிகுண்டு அகற்றும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரித்துவருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
