ஒரே சமயத்தில் 14 ஆயிரம் பேர் பணி நீக்கம்: டெஸ்லா நிறுவனத்தின் அதிரடி முடிவு
மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்லா மற்றும் எக்ஸ்(Twitter) தளத்தின் உரிமையாளராக இருக்கும் எலான் மஸ்க்(Elon Musk) எக்ஸ் தளத்தைக் கைப்பற்றியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
இந்நிலையில் அவர் ஆட்குறைப்பு, பெயர் மாற்றம் மற்றும் கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு தற்போது அவருடைய டெஸ்லா நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.
குறைக்கும் பணி
மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து எலான் மஸ்க் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் அறிவிப்பை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மின்னஞ்சலில் “நாங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிறுவனத்தை தயார்படுத்த இருக்கின்றமையினால் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் அதிலிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.
செலவுக் குறைப்பு
அதில் செலவுக் குறைப்பும் முக்கியம் என்பதனால் முழுமையாக மதிப்பாய்வு செய்ததில் நிறுவனத்தில் பணிபுரியும் 10% இற்கும் அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் வெறுப்பதற்கு எதுவும் இல்லை ஆனால் இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலானது டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களில் உலக அளவில் பணிபுரியும் ஊழியர்களைக் கவலையடையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம்
கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 1,40,473 ஆக இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதன் மொத்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருந்தது.
டெஸ்லா நிறுவனம் ஆஸ்டின் மற்றும் பெர்லினுக்கு வெளியே உள்ள இரண்டு ஆலைகளில் உற்பத்தியை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தப் பணிநீக்கம் நிறுவனம் முழுவதுக்கும் பொருந்தும் என்றால் குறைந்தது 14,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சுற்றுப்பயணம்
இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவையும் சந்தையும் விரிவடைந்து செல்வதை பயன்படுத்திக்கொள்ள எலான்மஸ்க் திட்டமிட்டுள்ள நிலையில் எலான் மஸ்க் பிரதமர் மோடியைச் சந்திக்கும் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இத்தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மின்சார கார்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஏற்கெனவே ஜெர்மனியில் உள்ள தனது ஆலையில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
இவை விரைவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு கடந்த மாதம் மின்சார வாகன இறக்குமதி வரியை 100 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக இந்திய அரசு குறைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டெல்லி மற்றும் மும்பையில் டெஸ்லாவின் கார் ஷோரும்கள் அமைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதுடன் இதற்கான இடங்களை டெஸ்லா நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதம் தீவிரமாகத் தேடியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |