நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டியில் காணி இழந்தவர்கள் கோரிக்கை!
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது.
குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியின் உறுதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் மக்களின் காணி மக்களுக்கே .. " என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நயினாதீவு நாகதீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி , அந்த காணியினை அவர்களிடமே மீள அளிப்பதே அறம் என கூறியிருந்தார்.
அதனையடுத்து , காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன் , காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை , தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட , தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |