தாஜுதீனின் மர்ம மரணம்! புதிய விசாரணைக்கு அரசாங்கத்திற்கு வலியுறுத்து
கொலை செய்யப்பட்ட இலங்கை ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் குடும்பத்தினர், 13 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தாஜுதீனின் மாமா, சம்பவம் மே 2012 இல் நடந்தபோது, தாஜுதீன் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
“நான் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவர் பயணிகள் இருக்கையில் இருந்தார், மேலும் வாகனத்திற்கு மிகக் குறைந்த சேதமே ஏற்பட்டது.இதுபோன்ற விபத்தில் யாராவது இறந்திருக்கலாம் என்பது ஆச்சரியமாக இருந்தது” என அவர் கூறியுள்ளார்.
தாஜுதீனின் மரணம்
அந்த நேரத்தில் ஆரம்ப அறிக்கை, தாஜுதீன் வேகமாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டியதாகவும், விபத்தால் ஏற்பட்ட தீயில் இருந்து புகையை சுவாசித்ததால் இறந்ததாகவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், நல்லாட்சி நிர்வாகத்தின் கீழ், நீதிமன்றம் நியமித்த ஏழு நீதித்துறை மருத்துவ அதிகாரிகள் குழு, தாஜுதீன் உடலை தோண்டி எடுத்து, முந்தைய அறிக்கைகளுக்கு முரணாக, அவர் சித்திரவதை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை சமர்பித்தனர்.
நீதித்துறை மீதான நம்பிக்கை
இந்த நிலையில், குறித்த உண்மை தெரியபடுத்தப்பட்ட போதிலும் எந்த அரசாங்கத்திடமிருந்தும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என தாஜுதீனின் மாமா தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய நிர்வாகம் இறுதியாக செயல்பட்டு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் இந்த அரசாங்கமும் செயல்படத் தவறினால், எதிர்காலத்திற்கான நம்பிக்கை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
