அமைச்சர் தயாசிறிக்கு எப்படி தொற்றியது கொரோனா? துலங்காத மர்மம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று எவ்வாறு பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவியதை அடுத்து அவர் காலி – ஹிக்கடுவ பிரதேசத்திலுள்ள அரசாங்க தனிமைப்படுததல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இராஜாங்க அமைச்சர் தயாசிறி அண்மைய நாடாளுமன்ற அமர்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி கொழும்பு – டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடந்த பிரித் சமய நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்ட பலர் தற்சமயம் கொரோனா அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
அதேபோல நாடாளுமன்றத்திற்குள் பாதுகாப்பு மற்றும் தொற்றுநீக்கல் ஏற்பாடுகள் குறித்து சபாநாயகரினால் சுகாதாரப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இதேவேளை தற்போது கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவாக அதிலிருந்து மீள வேண்டுமென ஜயசேகர தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.