புடினுக்காக கொலைகளை புரிபவருக்கு ஏற்பட்ட நிலை
ரஷ்ய அரச தலைவர் புடினுக்காக ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் மிக முக்கிய கொலைகாரர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2006ல் ரஷ்ய உளவாளி அலெக்சாண்டர் லிட்வினென்கோ கொலையில் தொடர்பிருப்பதாக பிரித்தானியா குற்றஞ்சாட்டிவரும் Dmitry Kovtun என்பவரே கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 56 வயதான Dmitry Kovtun கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் மொஸ்கோவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dmitry Kovtun
லண்டனில் மேஃபேர் ஹொட்டலில் வைத்து லிட்வினென்கோவுக்கான தேநீரில் polonium-210 இரசாயனத்தை கலந்துள்ளார் Dmitry Kovtun. தொடர்ந்து, அந்த இரசாயன தாக்கத்தால் லிட்வினென்கோவின் உடல் நிலை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்தது.
தற்போது Dmitry Kovtun மரணமடைந்துள்ள நிலையில், அவருடன் பணியாற்றியவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான Andrei Lugovoy இரங்கல் தெரிவித்துள்ளார். அலெக்சாண்டர் லிட்வினென்கோ கொலையில் தங்கள் இருவருக்கும் பங்கில்லை என்றே இருவரும் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.
ஆனால், இந்தப் படுகொலை விளாடிமிர் புடின் அல்லது அவரது நெருக்கமான வட்டாரத்தின் உத்தரவின் பேரில் நடந்ததாக பிரித்தானியா நம்புகிறது. மேலும், இருவரையும் விசாரணைக்காக பிரித்தானியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளாடிமிர் புடின் மறுத்தே வந்துள்ளார்.
அலெக்சாண்டர் லிட்வினென்கோ
polonium-210 இரசாயனம் கலந்த தேநீரை குடித்த அலெக்சாண்டர் லிட்வினென்கோ(43) லண்டனில் வைத்தே மரணமடைந்தார். மூன்று வாரங்கள் நீண்ட சிறப்பு சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் 2006 நவம்பர் 23ம் திகதி அவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
