அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ஏற்படக் காத்திருக்கும் பேரழிவு
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நன்கொடையாளர் நாடுகள் பிறநாடுகளுக்கான நிதி உதவிகளை குறைத்து வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வொன்றில் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , 2030க்குள் வளர்ச்சி பெறும் பல நாடுகளில் 2.26 கோடி கூடுதல் மரணங்களை ஏற்படுத்தக்கூடும் என பார்சிலோனா குளோபல் ஹெல்த் அமைப்பு(ISGlobal) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின் மூலம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஐந்து வயதுக்குட்பட்ட 54 லட்சம் குழந்தைகளின் மரணமும் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் மனிதாபிமான நெருக்கடி
கடந்த முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் அதிகாரப்பூர்வ அபிவிருத்தி நிதி உதவிகளை (ODA) குறைப்பதாக தீர்மானித்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்கனவே ஏற்பட்ட நிதி உதவி குறைப்பின் தாக்கத்துக்கு மேலாக, வரவிருக்கும் ஆண்டின் குறைப்புகள் பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என ஆய்வு எச்சரிக்கிறது.
93 குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட இந்த ஆய்வு, 5%–28% வரையிலான நிதி உதவி குறைப்பு மேற்கொண்டாலே சில ஆபிரிக்க மற்றும் வறுமையான நாடுகளில் கடுமையான உயிரிழப்பை உருவாக்கும் என்று கூறுகிறது.
USAID
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் USAID அமைப்பின் செயல்பாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இதேபோன்ற நிதிக் குறைப்புகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Image Credit: Fair Observer
சமீபத்தில் பிரிட்டன் 40%, பிரான்ஸ் 37%, நெதர்லாந்து 30%, பெல்ஜியம் 25% உதவி நிதியை குறைத்துள்ளன. இந்த திடீர் நிதி விலகல் காரணமாக மாற்று சுகாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்களைச் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகி வருகிறது என ஆய்வு எச்சரிக்கிறது.
இதனால் அபிவிருத்தி பெறும் நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் முற்றிலும் பின்னடைவு அடையும் அபாயம் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 8 மணி நேரம் முன்