அவசரகால சட்டமும் பயனற்றதே! இந்த அரசாங்கம் தேவையா? - கடுமையாக சாடும் எதிர்க்கட்சி
பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காகவே கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும் விலைகள் குறைக்கப்படுவதற்கு பதிலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார ( Ranjith Madhuma Bandara) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. கோதுமை மாவு ஒரு கிலோ 10 ரூபாவால் உயர்ந்துள்ளது. வரலாற்றில் இவ்வாறான விலை உயர்வுகள் ஏற்ப்பட்டதில்லை. அரசாங்கம் விலைகளை கட்டுப்படுத்தியுள்ளது என்று கூறினாலும் விலைகளை அதிகரிப்பது நிறுவனங்களே.
எனவே அரசாங்கம் என்ற ஒன்று தேவையா? அரச தலைவர், பிரதமர், அமைச்சரவை மற்றும் இந்த அரசாங்கமே பயனற்ற ஓர் ஆட்சியாக மாறியுள்ளது. இவர்களை தாண்டி முதலாளிகளும் நிறுவனங்களுமே தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.
இந்த அரசாங்கம் அதனது நிர்வாக முகாமைத்துவத்தை இழந்து செயற்ப்படுகிறது. அரிசி விலையை அரிசி ஆலை உரிமையாளர்களும் நிறுவனங்களும் மேற்கொண்டால், எரிவாயு விலையை நிறுவனம் மேற்கொண்டால், பால்மாவின் விலையை நிறுவனம் மேற்கொண்டால் ஏன் இத்தகைய ஒரு அரசாங்கம் தேவை.
பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் டொலர் இல்லை ஆனால் அரசாங்க குடும்ப அங்கத்தவர்களிடம் போதியளவு டொலர்கள் உள்ளது என்பதையே பன்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இத்தகைய கொள்ளையை நிறுத்தி மக்களுக்கு நிவாரனங்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தான் காரணம் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் கூறுகிறார்கள். எமது பிராந்திய ஏனைய நாடுகளை பாருங்கள் இந்தியா, பங்களாதேஷ், சிங்கபூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் சிறந்த முகாமைத்துவத்தால் பொருளாதார இருப்பை பேணியுள்ளனர்.
அரச வருமானத்தை 1/3 ஆக குறைத்து உற்ற நண்பர்களூக்கு 600 மில்லியன் வருமானத்தை பெற்றுக் கொடுத்தனர். முறையற்ற அரச நிர்வாகமே தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு பிரதான காரணமாகும். அண்மையில் அரச தலைவரே தனது இயலாமையை ஒப்புக்கொண்டார்.
திறமையற்ற அரச தலைவரை நியமித்துக் கொண்டு அதற்கேற்ற அடிமைகளையும் நியமித்துக் கொண்டு இந் நாட்டை குட்டிச் சுவராக்கியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கமே சுவர் ஓவியங்களை வரைந்தது. சீனியாலும் அன்டிஜெனாலும் மேற்கொண்ட மோசடிகளை காண்பித்தே இன்று சுவர் ஓவியங்களை வரைய வேண்டியுள்ளது.
அமைச்சர் கம்மன்பில கூறுவதைப் பார்த்தால், எண்ணெய் விலை உயரும் போல, அவ்வாறு உயர்ந்தால் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நான்கரை ஆண்டுகளாக எண்ணெய் விலையை ஒரே நிலையில் வைத்திருந்தோம்.
இதுலிருந்து புலப்படுவது தோல்வியுற்ற அரசாங்க நிர்வாகமே? அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தலைகீழாக உள்ளது. அரிசிக்கு ஒரு வர்த்தமானியை வெளியிடப்படுகின்றனர். சீனிக்கு ஒரு வர்த்தமானியை வழங்கப்படுகின்றன.
வெளியாகிய அனைத்து வர்த்தமானிகளும் மீளப் பெறப்படுகின்றன. உலகில் எங்கும் செய்ய முடியாத ஒன்றை இலங்கையில் செய்ய அரச தலைவர் முயற்சிக்கிறார். உலகில் எந்த நாடும் 100% கரிம உரத்தைப் பயன்படுத்தவில்லை.
யப்பானில் எங்களை விட அதிக தொழில்நுட்பம் உள்ளது. அவ்வாறு இருந்தும் யப்பான் கூட கரிம உரங்களை பயன்படுத்துகிறது. ஜே ஆர் ஜயவர்தன திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) யுத்தத்தை வெற்றி கொண்டார்,இது போன்றே ஜனாதிபதி தனது பெயரை வைத்துக்கொள்வதற்காக இதை செய்கிறார். அவர் கரிம உரங்களை தடை செய்து நாட்டை அழித்துள்ளார் என்று கூறினார்.
இன்று மக்கள் சோளம் பயிரிடும் பருவ காலம் முடிவடைகிறது. மழைக்காலத்தில் சோளத்தை பயிரிடாவிட்டால் செடிகள் வளராது. அது விவசாய அமைச்சருக்கு புரியவில்லை. அமைச்சர் பந்துல குணவர்தன கூறுவதை இன்று யாரும் நம்புவதில்லை.
அவர் வெள்ளைப்பூண்டு மோசடியை மூடி மறைக்க முயற்சிக்கிறார். ஒரு காலத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவால் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உணவு உட்கொண்டு வாழலாம் என்று கூறுகின்றனர் என்றார்.
