தள்ளிவிட்டால் விழும் நிலையில் அரசாங்கம் - வெளிவந்த கடும் விமர்சனம்
நாட்டின் தற்போதைய நிலையில் தள்ளிவிட்டால் விழும் நிலையில் அரசாங்கம் உள்ளதாகவும் நாட்டின் வரலாற்றில் மிகவும் பலவீனமான அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksha) இடம் பிடித்துள்ளதாகவும் ஐ.தே.க கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
ஐ. தே. க தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய(Saman Ratnapriya) மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடரந்தும் தெரிவிக்கையில்,
பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருக்கின்றது. அதனால் அரசாங்கம் வாழ்க்கைச்செலவை குறைப்பதற்கு எந்த வழியிலாவது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளன. அதனால் மக்களும் இந்த அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்திருக்கின்றனர்.
அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசி விலையை தீர்மானிப்பதற்கு அரசாங்கம் இடமளித்திருக்கின்றது. அதேபோன்று பல்வேறு காரணங்களை தெரிவித்து இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டதுடன் உள்நாட்டு பால்மா விலையும் அதற்கு நிகராக விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. உள்நாட்டு பால்மாவின் விலை அதிகரிக்கப்படவேண்டுமா என கேட்கின்றோம்.
மேலும் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்திருக்கின்றார். உலகில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் செல்வது இலங்கையில் மாத்திரமாகும். இலாபமீட்டிக்கொள்ள இவர்களுக்கு தெரியாது.
அதிகாரிகளின் ஊழல், மோசடியே இதற்கு காரணமாகும். எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் எரிபொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு விலையை அதிகரிக்கும். இதுதான் இந்த அரசாங்கத்தின் விலை சூத்திரம்.
அத்துடன் மக்களின் வாழ்க்கைச்செலவு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. ஆனால் அதற்கு நிகரான சம்பள அதிகரிப்பு இல்லை. வாழ்க்கைச்செலவுக்கமைய அரச, தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதில்லை. அப்படியாயின் மக்கள் எவ்வாறு வாழ்வது.? அதனால் வாழ்க்கைச்செலவை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த வழியிலாவது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இதற்கு மாற்று வழி இல்லை.
இன்று இளைஞர்கள் நாட்டில் வாழமுடியாது வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இன்று ஒருவாரத்துக்கு 12ஆயிரம் முதல் 15ஆயிரம் வரையான வெளிநாட்டு கடவுச்சீட்டு விற்பனையாகி வருகின்றது என மேலும் தெரிவித்தார்.