இலங்கைக்கு பிரிட்டன் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஆரம்பம் முதல் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, பாலின சமத்துவம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவல் அபாயத்தையும் மீறி ஸ்ரீலங்கா அரசாங்கம் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடத்தியதாகவும், எனினும் சிவில் சமூகத்தினர் மீதான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள “2020 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அறிக்கை”யில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்டநாட்கள் நபர்கள் தடுத்துவைக்கப்பட்டமை மற்றும் போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் பின்னடைவுகள் காணப்படுகின்றன. 2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குழந்தைகள் உட்பட எட்டு பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற இராணுவ உறுப்பினர் சுனில் ரத்நாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுவித்தமையானது பொறுப்புக்கூறலுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சர்சைக்குரிய இராணுவ வீரர்களை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி நியமித்துள்ளார். அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை உறுதியளித்திருந்தாலும் அது இன்னும் நடைமுறையில் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது. அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டார்.
சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், மனித உரிமை, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக பணியாற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதை மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் மனித உரிமைகள், பாலின சமத்துவம் சிறுபான்மையினர் மற்றும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள குழுக்களின் பாதுகாப்பிற்கு பிரித்தானியா தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்கும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள், சிவில் சமூகத்தின் மேம்பாடு, சமூக ஒத்திசைவு மற்றும் போருக்கு பின்னரான நல்லிணக்கம், பொறுப்பு கூறலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிடும் வகையில் அந்த இலட்சிய திட்டங்காக தொடர்ந்தும் முதலீடு செய்வோம் என, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.