தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படும் நிலை - ஆறு திருமுருகன் எச்சரிக்கை
தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறி போய்க்கொண்டிருக்கின்ற சூழலில் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியமெனவும், தவறினால் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படுமெனவும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் (செஞ்சொற்செல்வன்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நேற்று (16) மாலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சங்கிலியன் தோரண வாசல்
அவர் மேலும் தெரிவிக்கயைில்
''நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டது போன்று ஏனைய வரலாற்று மரபுரிமைச் சின்னங்களும் புனரமைக்கப்பட்டு அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக இங்குள்ள மந்திரி மனையை அடையாளப்படுத்தி காப்பாற்றுவது போன்று ஏனைய வரலாற்று அடையாளச் சின்னங்களையும் அடையாளப்படுத்த வேண்டும்.
இன்றைக்கு தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் எல்லாம் பறிபோகின்றது, எனவே வரலாற்று அடையாளங்களை நாங்கள் சரியாகப் பேணாவிட்டால், அதைப் புனைந்து அழிக்க நெருங்கி விடுவார்கள்.
அடையாளச் சின்னங்கள்
இவ்வாறு எமது பாரம்பரிய வரலாற்று அடையாள சின்னங்களை பாதுகாக்க யாழ் பல்கலைக்கழக சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எங்கள் அடையாளச் சின்னங்கள் எங்கிருந்தாலும் கல்வெட்டுக்கள் போடுங்கள், அதைவிடுத்து எதுவும் இல்லாமல் அது இது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் பாரம்பரிய அடையாளங்களை சொல்வதற்கு எம்மவர்களிடத்தே பொறுமை இல்லை. அந்தப் பொறுமையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.