மகிந்தானந்தவே முழுப்பொறுப்பு -மைத்திரி கடும் குற்றச்சாட்டு
நாட்டில் பயிர்ச்செய்கைக்கு உரம் கிடைக்காமல் போனதற்கு விவசாய அமைச்சரே பிரதான காரணம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரசதலைருமான மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சீர்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என தெரிவித்த அவர், அது இலகுவான விடயமல்ல எனவும் தெரிவித்தார்.
இரசாயன உரங்களை மீள இறக்குமதி செய்ய வேண்டுமாயின் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களை சேர்ப்பதற்கான நேர்காணலின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரசாயன உரங்கள் எவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்த மைத்திரி, விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டு அநாதரவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கரிம உரத்தில் கவனம் செலுத்துவது கொள்கையளவில் சிறந்ததாக இருந்தாலும், அதன் திட்டத்தில் ஏற்பட்ட பிழையினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, தானும் அரச தலைவராகவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த போது அதனைத் தீர்க்க முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.
முன்மாதிரியான செயற்றிட்டங்களை ஆரம்பித்து படிப்படியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், சேதன உரங்களை பயன்படுத்துவது ஒரே இரவில் செய்து விட முடியாது எனவும் தெரிவித்தார்.
இரசாயன உரங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடைவதாக விவசாய சமூகத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
இந்தப் பருவத்தில் உரப் பற்றாக்குறை விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்றும், இது விவசாயிகளின் குரலுக்குச் செவிசாய்ப்பதாகக் கருதப்படுவதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுமாறு கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த திஸாநாயக்க, இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.