நாட்டை ஆக்கிரமித்துள்ள கொலைக் கலாசாரம் : சஜித் ஆவேசம்
இலங்கையை கொலைக் கலாசாரம் ஆக்கிரமித்துள்ளதுடன் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்குமொரு சமூகம் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை மாகந்தன சங்கல்ப விகாரையில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இலவச சுகாதாரம் என்பது அரச வைத்தியசாலையில் இருந்து மருந்துச் சீட்டைப் பெற்று தனியார் மருந்தகத்தில் மருந்து வாங்கும் நடவடிக்கையல்ல.
இறப்பு விகிதம் அதிகரிப்பு
எனவே இந்த இலவச சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே இறப்பு விகித எண்ணிக்கை அண்மையில் 25% ஆக அதிகரித்துள்ளது.
தொற்றா நோய்கள் தான் இதற்கு காரணம் என்பதால், ஆரோக்கியமான சமுதாய வாழ்க்கை முறைகளை நோக்கி எமது வாழ்வை நாம் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.
தற்சமயம் மூளைசாலிகள் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது. படித்தவர்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பொது மக்கள் பாதுகாப்பு
கொலைக் கலாச்சாரம் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்குமொரு சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக் கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கொடூரமான கொலைகாரர்கள், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கும், மக்கள் வாழும் சூழலை உருவாக்குவதற்கும் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இதன் ஊடாக பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான வலுவானதொரு சட்டம் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பை நிறுவுவது சகல அரச மற்றும் அரச சாரா சிவில் சமூகத்தினது பொறுப்பாகும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
