உளவு செயற்கைக்கோள் விவகாரம் - அமெரிக்கா கண்டனம்
உளவு செயற்கைக்கோளை வட கொரியா விண்ணில் செலுத்த முயன்றது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பல்வேறு தடைகளுக்கு எதிரானது எனவும், அத்தகைய செயற்கைக்கோளால் பிராந்திய நிலைத்தன்மை பாதிக்கப்படும் எனவும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா உளவு செயற்கைக்கோள் விவகாரம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா, சீனாவிற்கிடையிலான பேச்சுவார்த்தையின் போதே அமெரிக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியாவின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷ்யா, சீனா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டு இராணுவப் பயிற்சி

கொரிய போா் முடிவுக்குப் பிறகு அந்த தீபகற்ப பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய பயிற்சிகளை தங்கள் மீது படையெடுப்பதற்கான போா் ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது.
அமெரிக்கா, தென் கொரியாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்கெனவே அணு ஆயுத சோதனை நடத்தியுள்ள வட கொரியா, அந்த ஆயதங்களை ஏந்திச் செல்லக் கூடிய பலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும் சோதித்துள்ளது.
எனினும், அத்தகைய சோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தாங்கள் உருவாக்கிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வட கொரியா கடந்த மே மாத இறுதியில் முயன்றது. எனினும், செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.
அதற்குப் பிறகு உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வட கொரியா 2-ஆவது முறையாக மீண்டும் கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்த முயற்சிகளுக்கு, தடை செய்யப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தடைகளை மீறிய செயல் என்று அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.