"வியத்தகு மாற்றங்களை” ஏற்படுத்தப்போகும் பஸில்
புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அர்த்தமுள்ள நிதி நிலைமையை அடையும் வகையில் "வியத்தகு மாற்றங்களை” அறிவிப்பார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிய நிதியமைச்சர், சந்தை, அரச மற்றும் வர்த்தகம் சார்ந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார் என பி.பி ஜயசுந்தர எக்கனமி நெக்ஸ்ட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் நடைமுறை சார்ந்துபோகும் நபர் என்ற வகையில், அவரது வரவு செலவுத் திட்டமும் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச கடந்த இரண்டு தசாப்தங்களில் குறைந்தது 12 வருடாந்த வரவு செலவுத்திட்டங்களை உருவாக்குவதிலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டமானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான, முக்கிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அர்த்தமுள்ள நிதி நிலைமையை பொறுப்புடன் அடைவது, நிதி இலக்குகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பொது செலவீனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் அமைச்சர் பசில் ராஜபக்ச, தனது வரவுசெலவுத் திட்டத்தில் பொருளாதாரத்திலும் சமூக மட்டத்திலும் வியத்தகு மாற்றங்களை மேற்கொள்வார் என தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சுதந்திரத்திற்கு பின்னைய வரலாற்றில் அதன் மோசமான செயல்திறனை 3.6 சதவிகிதத்துடன் பதிவு செய்த ஒரு வருடத்திற்குப் பின்னர், புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும், வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 38 ஆண்டுகளில் மிக மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவை குறைத்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.