தமிழ் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் இசைக் காய்ச்சல்
இலங்கையில் அடுத்த தலைமுறையினரின் கலைவடிவங்கள் பல பரிமானங்களை எடுத்து நகர்ந்துகொண்டிருக்கின்றது.
குறிப்பாக 'சொல்லிசை' என்று கூறப்படுகின்ற 'ரப் இசை' தற்பொழுது இளைய தலைமுறையினர் மத்தியல் மிகவும் பிரபல்யமாகி வருகின்றது.
1970களின் நியூயோர் நகரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட 'ரப் இசை' , தற்பொழுது உலகின் பட்டிதொட்டிகள் முழுவதும் இளைஞர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு இசையாக மாறிவிட்டுள்ளது.
நியூயோர் நகரம் தவிர அட்லாண்டா, லொஸ் ஏஞ்சல்ஸ், டொரொன்டோ, இலண்டன் போன்ற நகரங்களில் இன்று மிகவும் பிரபல்யமான பல சொல்லிசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவிலும் சொல்லிசை தற்பொழுது மிகவும் பிபல்யமாகிவருகின்றது.
சொல்லிசை தற்பொழுது பரினாம வளர்ச்சி பெற்று, Crung (கிராங்க்), G-Funk (ஜீ- பங்க்), East Coast Rap (கிழக்குக் கடற்கரை சொல்லிசை), Gangsta Rap(காங்ஸ்டா ரப்) மற்றும் Hip Hop (ஹிப் ஹொப்) என்று பல வடிவங்களில் பிரபல்யமாகி வருகின்றன.
தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் 'ரப் இசை' ஒரு இசைக்காய்ச்சலாக மாறி வேகமாகப் பரவி வருகின்றது.
மரபுமுறைக் கலைஞர்களால் கடும் விமர்சனங்களுக்கு இந்தச் சொல்லிசை உள்ளாகிவந்தாலும், சாமானிய மக்களுக்கும் எட்டிவிடும் தூரத்திலுள்ள ‘ரப்’ பாடல்கள் இன்று தவிர்க்கமுடியாத ஒரு கலையாக இளைஞர்கள் மத்தியில் உருவாகிவருகின்றது.
இங்கு இணைக்கப்பட்டுள்ள ஒரு ரப் பாடல், கிழக்கு மாகாணத்தின் காரைதீவு கிராமத்தில் உள்ள The Rap Monsters என்ற ஒரு தமிழ் ரப்குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு பாடல்.
பாடலின் தரம், பாடல் உருவாக்கப்பட்ட காட்சி அமைப்பு, மிகக் குறைந்த வளங்களுடன் இளைஞர்கள் இந்த ஒளிப்படக்காட்சியை உருவாக்கியிருக்கும் திறமை..- இவைகளைப் பார்க்கும் போது, சொல்லிசை என்பது அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய இசை எழுச்சியை ஏற்படுத்தப்போகின்றது என்பது தெரிகின்றது.
ஆனால் இசையின் இந்தப் புதிய வடிவம் ஊடாக எமது இனத்துக்கும், சமூகத்திற்கும் தேவையான நல்ல கருத்துக்கள் போய் சேரும் ஒரு நிலை உருவானால், அந்த இசை எழுச்சி மிகவும் ஆரோக்கியமான ஒன்றான இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.