சுதந்திரதினத்தை கரிநாளாக்கியது ரணில் அரசே… கிளிநொச்சியில் நடந்தது என்ன?
சுதந்திரம் என்பது சொல்லப்படுவதல்ல, அது உணரப்படுவது என்பதை முந்தைய பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஆகச் சிறந்த சுதந்திரம் என்பது அரசுக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்க்கருத்துக்களையும் அனுமதிப்பதுதான். ஆனால் சிறிலங்கா சுதந்திரதினத்தில் தமிழர்களுக்கான பரிசு என்ன என்பதை இன்று கிளிநொச்சியில் நிறைவேற்றப்பட்ட போர்க்களம் நன்றாக உணர்த்தியிருக்கிறது.
சிறிலங்கா சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் தலைவர்களும் அழைப்பு விடுத்தார்கள்.
ஆனால் அதனை கரிநளாக்கிய பெருமை ரணில் அரசுக்கு கிடைத்திருக்கிறது. இங்குதான் இன்றைய நாள் ஈழத் தமிழர்களை ஒடுக்கி அழிக்கும் ஆக்கிரமிப்பின் நாளாக நம்மால் உணரச்செய்யப்படுகிறது.
தடை உத்தரவு
பெப்ரவரி 04ஆம் நாள், சிறிலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரத்தை அளித்த நாள். இச் சுதந்திரத்திற்காகவும் அன்றைய சிலோன் உருவாக்கத்திற்காகவும் ஈழத் தமிழ் மக்கள் பெரும் உழைப்பையும் ஆளுமையையும் வழங்கி இருந்தார்கள்.
ஆனால் பின் வந்த காலத்தில் சிங்களப் பேரினவாதம், சிறுபான்மை மக்களை மெல்ல மெல்ல அடக்கவும் ஒடுக்கவும் அழிக்கவும் துவங்கியது.
இதன் முதற்கட்டமாக 1956இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் ஈழத் தமிழ் மக்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்ததுடன், அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை அறவழிப் போராட்டங்கள் வன்முறையால் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை, வடக்கு கிழக்கு மக்கள், கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சமூகங்களும் அரசியல் தலைவர்களும் அழைப்பு விடுத்திருந்தனர்.
அத்துடன் கிளிநொச்சியில் இரணைமடுவில் இருந்து கிளிநொச்சி நகரத்தின் மத்தியில் உள்ள டிப்போ சந்திவரையில் பேரணி ஒன்றுக்கான ஏற்பாடு இடம்பெற்றிருந்தது.
இதனை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தால் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே. துவாரகன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதி உள்ளடங்கலாக ஐந்து நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
போர்க்களத்திற்கு தயாரான காவல்துறை
கிளிநொச்சியில் என்றுமில்லாத வகையில் சிறிலங்கா காவல்துறை இன்று குவிக்கப்பட்டனர் அல்லது திரண்டிருந்தனர்.
மிகப் பெரும் போர்க்களம் ஒன்றுக்கு தயாரானமை போன்று தண்ணீர் தாரை பிரயோக வாகனம், பேருந்துகள், மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆயுதங்களுடன் கிளிநொச்சி நகரத்தில் திரண்டிருந்த காவல்துறையினர் பின்னர் இரணைமடுச் சந்தியில் இருந்து தொடங்கும் போராட்டத்தை 155ஆம் கட்டைக்கு இடையில், விவசாயத் திணைக்களத்திற்கு அண்மையில் நகர்ந்து தடை அமைத்திருந்தனர்.
இந்த நிலையில் இரணைமடுச் சந்தியில் இருந்து போராட்டம் துவங்கி சில நிமிடங்கள் நகர்ந்த நிலையில், பொலிஸின் தடையைத்தாண்டிச செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மக்கள், மக்கள் பிரதிநிதிகள்மீது கடுமையான நீர்தாரைப் பிரயோகத்தை சிறிலங்கா காவல்துறையினர் நடாத்தியதுடன் கண்ணீர்புகை குண்டுத் தாக்குதலையும் நடாத்தினர்.
அத்துடன், போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்கள்மீது தாக்குதல் நடாத்தியதுடன், அவர்களை கைது செய்யும் முயற்சிகளிலும் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்மீதும் தாக்குதல் இடம்பெற்றது.
எனினும் அவர் மாணவர்களை தாக்கி கைது செய்யும் காவல்துறையினரை தடுத்து, மாணவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் களத்தில் முன்நின்று போராடியிருந்தார். அத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சாள்ஸ் நிர்மலநாதன்மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள்
இதன்போது யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களான கவிதரன், எழில்ராஜ், அபிசாந்த் என்ற மாணவர்கள் சைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காத வகையில் நகர்ந்து வந்த பேரணியை தடுத்து குழப்பத்தை காவல்துறையினர் ஏற்படுத்திய நிலையில், ஏ-9 பாதையின் போக்குவரத்து சில மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னதாக மாணவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காத வகையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு மணியளவில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். சிறிலங்கா சுதந்திரதினம் எமக்குக் கரிநாள், இனப்படுகொலைக்கு நீதியை வழங்கு, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தாயகத்திற்கு விடுதலை வேண்டும் உள்ளிட்ட கோசங்கள் போராட்டத்தில் முழங்கின.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் ஈழத் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் உரிமையுடனும் வாழ்கின்ற நாளே தமிழர்களுக்கு சுதந்திரதினம் என்பது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முதன்மைக் குரலாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செலாளர் சிந்துஜனால் வெளிப்படுத்தப்பட்டது.
இதேவேளை இங்கு நடந்த தாக்குதல்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், உலகமெங்கும் இருந்து இத் தாக்குதலை கண்டித்து கண்டனங்கள் எழத் துவங்குகின்றன.
அநாதரவாகப் பறந்த சிங்கக் கொடிகள்
சிறிலங்கா சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் உள்ள சில நகரங்களில் சிங்கக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
வவுனியா நகரத்தில் சிங்கக் கொடிகள் பறந்ததுடன் , கிளிநொச்சி நகரத்திலும் இரவோடு இரவாக சிங்கக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
அத்துடன் அலுவலர்கள் இல்லாத அரச அலுவலகங்களிலும் அநாதரவாக ஸ்ரீலங்கா தேசிக்கொடி பறந்து கொண்டிருந்தது.
சிறிலங்கா சுதந்திர தினத்தில் ஈழத் தமிழ் மக்கள்மீது அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் பிரயோகித்துக் கொண்டு, சிங்கக் கொடிகளை தாமாவே ஏற்றிவிட்டுச் செல்லும் சிறிலங்கா அரசின் அணுகுமுறையை என்னவென்பது?
கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகின்ற போது, எமது பிணங்கள்மீது இக்கொடிகள் ஏற்றுவிக்கப்பட்டதைப்போலவே இன்று எமது நகரங்களிலும் ஏற்றுவிக்கப்படுகின்றன.
வடக்கு கிழக்கு மக்கள் அந்தக் கொடியை ஏற்றாமல் இருக்கும் வாழ்நிலையை சிங்கள தேசம் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் சுதந்திரம் கிடைக்கும் வரையில் ஒவ்வொரு ஈழத் தமிழரின் வாழ்வும் புறக்கணிப்பும் போராட்டமாகவே தொடரப் போகிறது.
மக்களால் கொடிகளை ஏற்றாதிருக்க, தாமே கொடிகளை வடக்கு கிழக்கில் ஏற்றி சிறிலங்காவை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதாக காட்ட முற்படுவது பெரும் மோசடியல்லவா?
சிறிலங்காவுக்கு மீட்சியில்லை
சிறிலங்காவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. மக்கள் வாழ முடியாமல் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரித்தானியாவிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றது. ஆனால் இன்று பிரித்தானியாவுக்கே பலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பிரித்தானியா போன்ற நாடுகளிடம் சிறிலங்கா கையேந்திக் கொண்டிருக்கிறது.
அப்படிப் பார்த்தால் சுதந்திரதினத்தில் என்ன அரத்தம் இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இன்னமும் விடுபட முடியாமல் விடுதலை பெற முடியாத நிலையிலும் ஈழத் தமிழர்களை ஒடுக்கி அழிப்பதில்சிறிலங்கா அரசு எத்தகைய குறியாக இருக்கிறது?
இது மிகவும் அதிர்ச்சியூட்டும் கேள்வியல்லவா? இத்தகைய நிலையிலும் கொண்டாடப்படும் சுதந்திரதினத்தில் பெரும்செலவில் ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் சிறிலங்கா அரசுக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மீட்சியும் விமோசனமும் தென்படுமா?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 04 February, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.