ஆலயம் ஆண்டவனுக்கு சொத்து சேர்க்கும் இடமல்ல அது ஆண்டவன் பெயரால் மக்கள் சேவையாற்றும் நிறுவனம்
ஆலயம் என்பது சமூக வளர்ச்சி மையமே அன்றி அருவமான இறைவனுக்கு சொத்துச்சேர்க்கும் இடம் அல்ல என்ற நிலைப்பாட்டை ஒவ்வொரு ஆலய அறங்காவலர் சபையும் உணர்ந்தாகவேண்டிய ஒரு நிலைப்பாட்டிற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். காலாகாலமாக ஆலயம் என்பது சமூகம் சார்ந்து சமூக வளர்ச்சியை ஏற்படுத்து ஒருவிதமான சமூக அபிவிருத்திக்கான ஒரு தளமாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆனால் சமகால நிலவரங்களும் அதனை நிருவகிப்பவர்களின் மனநிலையும் இணைத்து ஆலயம் என்பது, வங்கிக்கணக்கில் பணம் சேர்த்து வட்டி ஈட்டும் நிறுவனமாக இலாப நோக்கத்தை நோக்கிய தீர்மானங்களை எடுப்பதாக, பொது நன்மை கருதியோ அல்லது சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பது குறைவு என்ற விமர்சனப்போக்கான கருத்தியல் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.
ஈழத்தை பொறுத்தவரை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம் தவிர்ந்து ஏனைய ஆலயங்கள் இந்த நிலைப்பாட்டில் பெரிதும் செல்வாக்குச் செலுத்திக்கொண்டே இருக்கிறது என்பது வருத்ததுக்குரிய ஒரு விடயமாகவே நாம் நோக்கியாகவேண்டும்.
அதற்காக ஏனைய ஆலயங்கள் சமூக சேவை சார்ந்து அல்லது பொதுமக்களுக்கான பணிகளை ஆற்றவில்லை என்று சொல்லைவில்லை. ஆனால் அவை தெல்லியூர் துர்க்கையம்மன் போன்ற ஆலயங்களோடு ஒப்பிடும்போது மிகப்பெரிய சரிவுப்பெறுமானத்தை பெறுகிறது என்பதனை மறுத்துப்பேசவியாலாது.
இங்கு நாம் நமது ஒவ்வொரு ஆலய அறங்காவலர் சபைகளும் தமக்குள் நிலைப்பாட்டு மாற்றத்தை உள்வாங்கி மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவை நிலையங்களாக விஸ்தரிக்கப்படவேண்டும்.
அந்த அந்த பிரதேசங்களின் மிகப்பெரும் வருவாய் வரன்முறைகளுக்குட்பட்ட ஆலயங்கள் தமது பொருளாதார நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தினால் நமது சமூகம் வறுமைக்கோட்டுப்புள்ளியை தாண்டி இன்னுமொரு கட்டத்தை அடைந்துவிட முடியும்.
ஆலயம் என்பது ஆண்டவனுக்கு சொத்து சேர்க்கும் இடமல்ல அது ஆண்டவன் பெயரால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய ஒரு தாபனம், மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அதற்காகத்தான் ஆலயங்களுக்கு அறங்காவலர்களையும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களையும் நியமிப்பதே அன்றி ஆண்டவன் சந்நிதியில் அதிகாரம் காட்டவோ அல்லது அடுத்தவரை நிர்வகிப்பதற்கோ அல்ல.
அறங்காவலர்களின் பணி என்ன? அவர்களுக்கான அறம் எப்படிப்பட்டது இது பற்றி இப்போது அறங்காவலர்களுக்கு வகுப்பெடுக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது ஒரு துர்ப்பாக்கியமே, ஆக இப்போதைய இயற்கை இடர்நேரம் நமது ஆலயங்கள் தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுகளை வழங்கி அவர்கள் துன்புற்றிருக்கின்ற நேரத்தில் மிகவும் ஒரு ஆறுதலான நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இங்கு நாம் எதிர்பார்க்கின்ற அடைவும் இதுவாகத்தான் இருக்கிறது, இந்த அடைவு தொடர்ச்சியான இயங்கியலை வெளிப்படுத்தவேண்டும். மீண்டும் ஆலயங்கள் சமூக மையங்களாக வளர்ச்சிபெறவேண்டும், சமூக வளர்ச்சிக்கான ஆரம்பத்தளம் ஆலயத்தில் இருந்து கட்டி எழுப்பட வேண்டும்.
அப்போதுதான் ஒரு நம்பிக்கையான சார்பற்ற அமைப்பு முறை உருவாகும் அதுவே நமது நோக்கமாகவும் இருக்கவேண்டும் அப்படி இருந்தால் தனவந்தர்கள் தமது நன்கொடை நடவடிக்கைகளை ஆலயத்தின் மீது நம்பிக்கையோடு மேற்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைந்துவிடும்.
நாம் சொன்ன சமூக மாற்றம் இங்கிருந்தே ஆரம்பிக்கட்டும் நமது சமுகம் மாறவேண்டும். நமது இனம் வாழ வேண்டும் வலுவான ஒரு கட்டமைப்பை நாம் நகரவேண்டிய காலத்தேவையை உணர்ந்து நாம் சிந்திப்பதே சாலப்பொருந்தும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |