உறவுகளை நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை: முல்லைத்தீவு நீதவான் உத்தரவு(படங்கள்)
உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் இடம்பெற்ற கட்டளையின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.
மாவீரர் தின தடை
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்றையதினம் முல்லைத்தீவு நீதவானால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக 24.11.2023 வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை தொடர்பாக எங்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த கட்டைளையை ஒவ்வொரு நிலைய காவல்துறை பொறுப்பதிகாரிகளும், ஒவ்வொரு விதமாக கூறி பொதுமக்களின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.
குறிப்பாக சிவப்பு, மஞ்சள் கொடிகளை கட்டுவதற்கும், கார்த்திகை பூ வைப்பதற்கும், துயிலும் இல்லம் எனும் வசனம் தாங்கிய பதாதை காட்சிப்படுத்துவது, இறந்தவர்களை நினைவு கூரும் விதமாக இசைக்கப்படும் சோக கீதம் இசைக்க தடை என காவல்துறையினர் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்துள்ளோம்.
நினைவு கூருவதற்கு தடை இல்லை
இதனை ஏற்ற மன்று தெளிவான கட்டளை ஒன்றை ஆக்கியிருக்கின்றது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் இறந்த ஆன்மாக்களுக்கு நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை.
எம்மால் கூறப்பட்டவாறு கார்த்திகை பூவினை இறந்தவர்களின் ஆத்மா நினைவிடத்திற்கு பாவிப்பதற்கும், சிவப்பு மஞ்சள் கொடி பாவிப்பதற்கும், சோக இசைகள் ஏற்றவாறு ஒலிப்பதற்காக ஒலிபெருக்கியை பயன்படுத்தவும், மாவீரர் எனும் வசனம் பாவிக்காது துயிலும் இல்லம் எனும் பதாதையை வைக்கவும் மன்று அனுமதி வழங்கி இருக்கின்றது.
நீதிமன்ற தீர்ப்பு
இது உண்மையில் இறந்தவர்களின் உறவுகளுக்கு நல்ல செய்தி என்பதும் அவர்கள் தங்களுடைய உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கும் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளையாகும்.
இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலர் என்னுடன் இணைந்து முன்னிலையாகியிருந்தார்கள்.
இந்த வழக்கிலே யாருக்கு எதிராக கட்டளை வழங்கப்பட்டதோ அவர்கள் இங்கே முன்னிலையாகி இந்த வழக்கிற்கான தீர்ப்பினை பெற்றுக் கொண்டோம்” என மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






