ஆரியகுள அபிவிருத்தியில் விகாராதிபதியின் தலையீடு - தமிழ் தேசிய பசுமை இயக்கம் கண்டனம்
யாழ்ப்பாணம் ஆரியகுளம் அபிவிருத்தியில் நாகவிகாரை விகாராதிபதி தலையீடு செய்து வருகின்றமை தொடர்பில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பிற்காக அமைக்கப்பட்ட குளத்தை விகாரைக்கு சொந்தமான ஒன்றென குறிப்பிட முடியாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரியகுளம் அபிவிருத்தித் திட்ட பணிகள் கடந்த ஜுலை 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
அறக்கட்டளை ஒன்றின் நிதி அனுசரணையில் இடம்பெறும் இந்த அபிவிருத்தி பணிகளுக்கு ஆரம்பம் முதல் இந்தக் குளத்திற்கு அருகில் உள்ள நாகவிகாரை விகாராதிபதி விமலதேரர் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது.
ஆரியகுளத்தில் முன்னைய காலத்தில் பிக்குகள் நீராடினார்கள் எனத் தெரிவித்து, குளத்திற்கு மத்தியில் தியான மண்டபம் ஒன்றைய அமைக்குமாறு தேரர் வலியுத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஆரிய குளத்தின் புனரமைப்புப் பணிகளில் நாகவிகாரை தலையிட்டு வருவது தொடர்பில் அறிக்கையொன்றின் ஊடாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குளத்தின் பருத்தித்துறை வீதிப்பக்கமாக நடைபாதை அமைக்கப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்துமாறும், குளத்தைச் சுற்றுலாத் தேவைகளின் பொருட்டுப் பயன்படுத்தக்கூடாது என்றும் மாநகர முதல்வருக்குக் கடிதம் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளதாக பொன்னுத்துரை ஐங்கரநேசன் (P. Iynkaranesan) வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரியகுளம் நாகவிகாரைக்கு உரித்தான குளம் அல்லவென சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆன்மீகத் தேவைகளின் பொருட்டு வேறு ஆலயங்களால் உருவாக்கப்பட்ட குளமும் அல்ல எனவும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வெள்ள நீர்முகாமைத்துவத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த அறிவைப் பறைசாற்றுகின்ற பண்டைய குளங்களில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரியகுளத்தில் ஒரு காலத்தில் பிக்குகள் நீராடினார்கள் என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம் குளத்தின் மீது உரிமை கொண்டாட முயலும் விகாராதிபதி அபிவிருத்திப் பணிகளை நிறுத்துவதற்கு அல்லது தமக்குரியதாக மாற்றி அமைப்பதற்கு யாழ். மாநகர சபையை வற்புறுத்தி வருவதாக ஐங்கரநேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் பௌத்தத்துக்கே முதலிடம் என்ற வகையில் இவர் யாழ். மாநகர சபையின் மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடும் எனவும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.