"நாட்டை சௌபாக்கிய நிலைமைக்கு அல்ல சிம்பாபேயின் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளனர்" -பாட்டலி சம்பிக்க ரணவக்க
டொலர் தட்டுப்பாடு இதனால், ஏற்பட்டுள்ள நிலைமை சம்பந்தமான எதுவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வரவு செலவுத்திட்ட உரையில் இருக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 வது படைப்பிரிவு என்ற அமைப்பை நுவரெலியா மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தும் வைபவம் ஹட்டனில் இன்று நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"நாடு எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை, கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருக்கும் பிரச்சினை. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
தற்போது பால் மா, சமையல் எரிவாயு, மண் எண்ணெய் உட்பட பலவற்றுக்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பசளை தடை காரணமாக நீண்டகாலம் செல்லும் முன்னர் அரிசிக்காகவும் மக்கள் வரிசையில் நிற்க நேரிடும். காய்கறி, பழங்களுக்கான தட்டுப்பாடு வெகு தூரத்தில் இல்லை.
பெரும் போகத்தில் நெல் அறுவடை செய்ய மூன்றில் ஒரு சத வீதத்தினர் தயாராக இருப்பதாக கமத்தொழில் அமைச்சர் கூறுகிறார்.
கமத்தொழில் அமைச்சருக்கு வாய் மாத்திரமே இருக்கின்றது. உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டதும் எண்ணெய் சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்றை சப்புகஸ்கந்தையில் ஏற்படுத்த போவதாக பெரிதாக கூறினார். அது மிகப் பெரிய முதலீடு எனவும் கூறினார்.
தற்போது கச்சா எண்ணெயை கொண்டு வர டொலர் இல்லாத காரணத்தினால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூடப் போகின்றனர்.
பணத்தை அச்சிட்டு, அச்சிட்டு நாட்டை சௌபாக்கிய நிலைமைக்கு அல்ல சிம்பாப்வேவின் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளனர் "என குறிப்பிட்டுள்ளார்.