தியாக தீபம் திலீபனின் எண்ணங்கள் தமிழினத்தினுடைய அடையாளமே : பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
தியாக தீபம் திலீபனின் எண்ணங்களை சுமப்பது தமிழினத்தினுடைய எண்ணங்களை சுமப்பதற்கு சமமானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட அரசறிவியல் துறை தலைவர், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் போதைகளுக்குள் முடங்கியிருக்கும் இளைஞர்களை மீட்கவும் அரசியல் போதையில் உள்ள அரசில்வாதிகளை மாற்றியமைக்கவும் தியாகி திலீபனின் எண்ணங்கள் விதைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டெழும் பார்த்தீபம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற "மீண்டெழும் பார்த்தீபம்" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கே.ரீ.கணேசலிங்கம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது "திலீபனின் கோரிக்கைகளும் யதார்த்தமும்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கத்தின் உரையும், "நினைவெழுச்சி - மாற்றத்திற்கான திறவுகோல்" எனும் தலைப்பில் கலைப்பீட நுண்கலைத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதனின் உரையும் இடம்பெற்றிருந்தது.
துண்டுப்பிரசுர விநியோகம்
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தீயாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.
இதேவேளை, நாளைய தினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை மறுதினம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கபடவுள்ளது