யாழில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம்! ஒருவரின் உடல்நிலை மோசம்
இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று(21) மூன்றாவது நாளாக தொடர்ந்துள்ளது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் இந்த நிமிடம் வரை அமைச்சரோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து ஆரதவு தராமை மிக வேதனையாகவுள்ளதாகவும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உடல் நிலை
குறிப்பாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு கடற்றொழிலாளர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு கடற்றொழிலாளர் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலாளர்
மேலும் குறித்த கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம்(21) யாழ் தையிட்டி அன்னை வேளாங்கணி கடற்றொழில் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேநேரம் நடைமுறைச் சாத்தியமற்றதென தெரிந்தும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வகிபாகத்தை அழைப்பு விடுக்காமலும் தானாக ஒட்டிக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகளும் மற்றும் செய்திகளும் விடுப்பவர்கள், எமது இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது வேதனையாக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் கவலை தெரிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |