திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானத்தில் காணி சர்ச்சை - பொதுமக்கள் எதிர்ப்பு
முன்னாள் உதவி காவல்துறை அத்தியட்சகர் எனக் கூறப்படும் குமாரசிறி என்பவரின் காணி உரிமை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு, திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் தனக்குக் காணி இருப்பதாகக் கூறி, குமாரசிறி என அழைக்கப்படும் முன்னாள் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தொடர்ச்சியாகக் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு முதல் குறித்த நபர் இந்த இடத்தில் தனக்குக் காணி உரிமை இருப்பதாகக் கூறி, வேலிக் கம்புகள் மற்றும் மரக்கட்டைகளை நாட்டி காணியைச் சுற்றிவளைக்க முயற்சித்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கும் அவருக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் ஏற்கனவே முறைப்பாடு
இந்நிலையில், கடந்த மாதம் குறித்த இடத்தில் நாட்டப்பட்டிருந்த வேலிக் கம்புகள் மற்றும் மரக்கட்டைகள் பிடுங்கி அகற்றப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இன்று (10.11.2026) மீண்டும் அங்கு வந்த குறித்த நபர், கொங்கிரீட் தூண்களை அமைப்பதற்காகக் கற்கள், மணல், சீமெந்து மற்றும் கொங்கிரீட் தூண்களை அங்கு இறக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை அந்த இடத்திலிருந்து வெளியேறச் செய்துள்ளனர். இந்தக் காணி விவகாரம் தொடர்பில் கிராம மக்கள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதமே, மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் உரிமையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாகவும், கிராம மக்களின் சார்பாகவும் ஜனாதிபதிக்கு எழுத்துமூலமான கடிதம் ஒன்றை அனுப்பி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலும், குறித்த காணி விவகாரத்தில் தீர்வு எட்டப்படாமல் மீண்டும் கட்டுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் எழுப்பும் கேள்விகள்
- மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் குறித்த நபருக்கு எவ்வாறு காணி உரிமை கிடைத்தது?
- இந்தக் காணியை அவருக்கு வழங்கியது யார்?
- பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் மைதானத்திற்குள் தனிநபர் ஒருவருக்கு எவ்வாறு காணி உரிமை வழங்கப்பட்டது?
- இந்தக் காணி உரிமை தொடர்பான ஆவணங்கள் என்ன?
- இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர்? ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா?
எனப் பல்வேறு கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்புகின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் உரிய விளையாட்டு மைதானத்தின் காணி உரிமை தொடர்பான உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொது விளையாட்டு மைதானங்கள் தனிநபர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக அபகரிக்கப்படக் கூடாது.
மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானத்தின் காணி விவகாரத்தில் உண்மை நிலை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, மக்களின் பொதுச் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |