மாத்தளை ரயில் பாதையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: அமைச்சரவை அனுமதி
மாத்தளை ரயில் பாதையில் பேராதனைக்கும் சரசவி உயனவுக்கும் இடையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (10.11.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த ரயில்வே உட்கட்டமைப்புகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான இந்தியக் கடன் திட்டத்தின் நிதியுதவியுடன் இந்தப் புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடன் திட்டத்தின் நிதியுதவி
இதன் மூலம் மாத்தளை ரயில் பாதையை தேசிய ரயில்வே வலையமைப்புடன் இணைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாநகரப் பகுதியை உள்ளடக்கிய விரிவான புறநகர் ரயில் வலையமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான ஆய்வுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வின் கீழ், கடுகன்னாவை முதல் பேராதனை ஊடாக கம்பளை வரையிலான ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றுதல் மற்றும் பேராதனை முதல் கட்டுகஸ்தோட்டை வரையிலான மாத்தளை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |