கல்வி சீர்திருத்தம் எங்களுடையது அல்ல...வடக்கில் பிரதமர் பகிரங்கம்
புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சுக்கோ, அநுர ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமர் ஹரிணிக்கோ சொந்தமானது அல்ல என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து வட மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக வடக்கு மாகாண செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள் என்பது அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் மாணவர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமத்துவம்
அதன்போது பிரதமர் மேலும் கூறுகையில், "தற்போதுள்ள கல்வி முறையில், முதலாம் ஆண்டில் நுழையும் ஒரு பிள்ளை எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடனும் அல்லது மகிழ்ச்சியுடனும் பாடசாலை கல்வியை முடிப்பதில்லை.
பிள்ளைகளுக்கு ஏற்ற பாடசாலை சூழலும் கற்பித்தல் முறையும் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலையினால் மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள் மற்றும் தொழில்முறை திறன்களைக் கொண்ட அனைத்து நிபுணர்களையும் உருவாக்க வேண்டும்.
புதிய கல்வி சீர்திருத்தத்தில், ஒரு மாகாணம், மாவட்டம் அல்லது பிராந்தியம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிராந்தியமும் முக்கியமானது. சமத்துவம் அங்கிருந்து தொடங்குகிறது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
