தையிட்டியில் மாபெரும் விழா - பாதுகாப்பு வழங்கிய காவல்துறையால் வெடித்த சர்ச்சை
யாழ் (Jaffna) தையிட்டி - திஸ்ஸ விகாரையில் காவல்துறையினரின் முழுமையான பங்களிப்புடன் விழாவொன்றுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விழா இன்று (13) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைகள்
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு இன்னும் ஓரிரு வாரத்துக்குள் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்திருந்தார்.
தீர்வொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள், காணிகளின் உரிமையாளர்களுடனும் மற்றும் விகாரையின் நிர்வாகத்துடனும் இடம்பெற்று வருகின்றன.
திஸ்ஸ விகாரை
அரச உள்ளக மட்டத்திலும் விகாரைக்கான தீர்வுக்காக சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, விகாரையைச் சார்ந்த மத அனுட்டான விழாவொன்றுக்கு அங்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
சட்டவிரோதத் திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர், விழாவை முன்னின்று ஏற்பாடு செய்கின்றனமை பல்வேறு விசனங்களை உருவாக்கியுள்ளது.
பிரதேச சபை
திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் முன்னெடுப்புக்களை வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, இராணுவத்தினரும், காவல்துறையினரும் மற்றும் புலனாய்வாளர்களும் பிரதேச சபை உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன் மற்றும் ஒளிப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அத்தோடு, பலாலிப் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி அங்கு விரைந்து சென்று பிரதேச சபை உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பெயர் விவரங்களைப் பதிவு செய்து சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
