தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுவதுடன், விகாரை அமைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கவனயீர்ப்பு போராட்டம்

அதன் தொடர்ச்சியாக நேற்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தப் போராட்டத்தை அடுத்து அங்கு சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன அழிப்பு இராணுவமே வெளியேறு, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி மண் தமிழர் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை இடித்து அகற்று போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
வலுச் சேர்க்க அழைப்பு

அத்துடன் திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு அருகில் இன்று மாலை நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு, வலுச் சேர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பிரசார செயலாளர் காண்டீபன் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.