தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தல் -பகிரங்கமாக கருத்து வெளியிடவுள்ள லொகான் ரத்வத்த
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று இரண்டாவது முறையாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சுயாதீனமான விசாரணைகள் முடிந்த பின்னரே இந்த சம்பவம் குறித்து தாம் பகிரங்கமாகக் கருத்து வெளியிடுவேன் என லொஹான் ரத்வத்த(Lohan Ratwatte) குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கடந்த மாதம் 12 ஆம் திகதி இரவு நுழைந்து, தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசேட குழு அமைக்கப்பட்டு தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று இரண்டாவது நாளாக ஆணைக்குழுவில் முன்னிலையான லொஹான் ரத்வத்த, அதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு என்னை நேற்று முன்தினம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அழைத்திருந்தார்கள். நான் நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்திருந்தேன். இன்றும் அந்த வாக்குமூலத்தை உறுதிசெய்து கையெழுத்திட வந்தேன். சுயாதீனமான விசாரணைகள் நடைபெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் வேறு எதனையும் குறிப்பிடமுடியாது.
சுயாதீனமான விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவே நான் பதவியிலிருந்து விலகியிருந்தேன். அதன்படி விசாரணைகள் முடிந்ததன் பின்னர் அதுபற்றி கருத்து தெரிவிப்பேன் எனத் தெரிவித்தார்.