போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ் : இதுதான் காரணம்
காசா (Gaza) பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலும் (Israel) ஹமாஸும் (Hamas) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவிலுள்ள குழந்தைகளுக்கான போலியோ (Polio) சொட்டு மருந்து வழங்குவதற்காகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போர் நிறுத்தம்
இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்துக் கொண்டு இருக்கின்றன.
காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கான சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதனால் போலியோவுக்கு எதிராக காசா முழுவதும் சுமார் 640,000 குழந்தைகளுக்கு முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான முதற்கட்ட பிரசாரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |