படுதோல்வியை சந்தித்த கோட்டாபய அரசாங்கம் - திஸ்ஸ அத்தநாயக்க சாடல்
அரிசிக்கான விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை திரும்ப பெற்றதன் மூலம் அரசாங்கம் பாரிய தோல்வியை சந்தித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ( Tissa Attanayake ) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும் நாட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் அரசாங்கத்தினால், அரிசி வியாபாரிகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசிக்கான விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை திரும்ப பெற்றதன் மூலம் அரசாங்கம் பாரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதன் இறுதி பிரதிபலனாக பொருட்களின் விலைகள் அதிகரித்து, மக்கள் பாரிய அநீதிக்கு உள்ளாவார்கள்.
சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் போது, அதனை கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை திரும்ப பெற்றிருக்கலாம். தற்போதைய அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவும் அவற்றை திரும்ப பெறவும் புதுமையான திறமையை கொண்டுள்ளது.
உறங்கி எழுந்த பின்னர் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுகிறது. 24 மணி நேரத்தில் அவற்றை மீண்டும் திரும்ப பெறுகிறது. இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடும் அரசாங்கமே பதவிக்கு வந்துள்ளது.
அரசாங்கத்திடம் இருந்து மக்கள் நிவாரணத்தையே எதிர்பார்க்கின்றனர். விசேடமாக இப்படியான அழிவான நிலைமையில், நாட்டின் மக்களை தற்போதைய அரசாங்கம் வாழவைக்க தவறியுள்ளது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் திரும்ப பெறப்பட்டதன் மூலம் அரசாங்கத்தை விட வர்த்தகர்கள் பலமிக்கவர்களாக இருக்கின்றனர் என்பதை காட்டுகிறது என்றார்.