மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழரசுக் கட்சியின் துரோகிகள் : காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகை
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இழப்பு தமிழ் அரசியல் களத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் மீதான மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.
சுகயீனம் காரணமாக கடந்த 28 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, 29 ஆம் திகதி தனது 82 ஆவது வயதில் உயிரிழந்தார்.
மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் இன்று (02) பகல் இரண்டு மணிக்கு அக்கினியில் சங்கமமானது.
இந்தநிலையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள் என பெயரிடப்பட்ட பதாகை மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாகையானது வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் என தெரிவிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் என பலதரப்பட்டோரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாவையின் இறப்பு, உடல்நலக்குறைவை தாண்டி மன அழுத்தத்தால் ஏற்பட்ட ஒரு விடயம் என அனைவராலும் தொடர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு, மாவையின் உறவினர்களும், சில அரசியல் தலைமைகளை மாவையின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள கூடாது என எச்சரித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு எச்சரிக்கப்பட்டவர்கள் இறுதி கிரியைகளிலும் கலந்து கொள்ளாத நிலையில், ஒருவேளை இவர்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாகத்தான் மாவை பாதிப்பட்டிருக்கலாம் எனவும் சமூக ஊடகங்கள் உட்பட அதே கட்சியை சார்ந்த முன்னாள் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தற்போது குறித்த பதாகைகள் காட்சியளிக்கபட்டிருப்பது தமிழ் அரசியல் தலைமைகள் மீதான தமிழ் மக்களின் ஆதங்கத்தையும் மற்றும் கோபத்தையும் வெளிப்படையாக காட்டுவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |