தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் பரவும் வதந்திகள்! மாவை அளித்த விளக்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, திட்டமிட்டவாறு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, 21 ஆம் திகதி இடம்பெறாது என வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் மாவை சேனாதிராஜா ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கான அழைப்பு கடிதங்கள்
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூட்ட ஆவணங்களில் அவர் கையெழுத்திட முடியாத சூழல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் கூட்டத்துக்கான அழைப்பு கடிதங்கள் இதுவரை உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு திட்டமிட்ட திகதியில் நடைபெறாது என செய்திகள் வெளியாகியிருந்தன.
உண்மைக்கு புறம்பான செய்தி
இந்த செய்தி தொடர்பில் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவை ஐ.பி.சி தமிழ் தொடர்பு கொண்டு வினவிய போது, இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியின் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்படுமானால் அது தொடர்பாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அதுவரை வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கட்சியின் தலைவர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு வெளியிடப்படும் செய்திகளை கட்சியை பலவீனப்படுத்தும் எனவும் மாவை சேனாதிராஜா கூறியதுடன், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் செய்திகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |