கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வட மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (1.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 50-55 வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 ஆண்டுகால சூறாவளிகள்
இதேவேளை, கடந்த 300 ஆண்டுகால வரலாற்றில் தற்போது உருவாகியுள்ள பெங்கால் புயல் கணிக்க முடியாத வேகத்திலும் கணிக்க முடியாத திசை நோக்கியும் காணப்பட்டது என யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வங்களா விரிகுடாவில் தோற்றம் பெறும் சூறாவளிகள் ஒருபோதும் வடகிழக்கு திசை நோக்கி நகர்வது கிடையாது.
கடந்த 300 ஆண்டுகால வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயலில் தற்போது ஏற்பட்ட புயலே வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்திருக்கின்றது.
பொதுவாகவே புயல் கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தால் அது தன்னை பலப்படுத்தி கொள்வதாக அர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |