இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய நாளுக்கான (07.02.2025) நாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
காலை 9.30க்கு ஆரம்பமான இன்றைய அமர்வுகள் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.
அதன்படி காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 5.00 வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.
(i) தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல்
(ii) கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு முறையான பெறுகை வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.
(iii) அரசாங்கம் வசம் அரிசி கையிருப்பினை பேணிச் செல்வதற்காக வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்.
(iv) தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல்.
(v) நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல்.
(vi) கொரோனா -19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்.
அத்துடன் மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)