இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (29.04.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்காலிகமாக பலத்த காற்று
மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் அனர்த்தம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட J 208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J 279 கிராம சேவகரபிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J 301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 3 பேரும் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J426 கிராம சேவகர் 1குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்-என்றார
