காலை வேளை மழையுடன் கூடிய வானிலை தொடரும்!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. ஒரு மணிக்குப் பின்னர் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள நிலையில், இன்று வெளியான வானிலை அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.