கொழும்பில் வசிக்கும் 12 - 19 வயதுடையோருக்கு முக்கிய தகவல்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் அக்டோபர் மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகள் நிறைவு பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது லுணுகம்பொல,பகலகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டது.
நாட்டில் 12 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட நோயாளர்களான சிறுவர்கள் 35,000 பேர் உள்ளனர். அவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படுகிறது.சிறுவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சுகாதார துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பே சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, நாளை (திங்கட்கிழமை) முதல் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.