மட்டக்களப்பில் இடம்பெற்ற இஞ்சி அறுவடை விழா!
மட்டக்களப்பில் (Batticaloa) ஏற்றுமதி விவசாய பயிரான இஞ்சி அறுவடை விழா நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று (22) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அறிமுகம் செய்யும் நிகழ்வு
இந்தநிலையில் ஏற்றுமதி விவசாய திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் நர்த்தனா குகதாசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஏற்றுமதிப் பயிர்களின் செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வு கிரான் பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்றது.
கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோரளங்கேணி பகுதியில் செய்கை பண்ணப்பட்ட இஞ்சி அறுவடை விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் ஏற்றுமதிப் பயிரான இஞ்சி அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
சலோம் எஸ்டேட் ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற குறித்த அறுவடை நிகழ்விற்கு விசேட அதிதியாக கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் காசு சித்திரவேல் கலந்து சிறப்பித்ததுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கேமச்சந்திரிக்கா திருமால், கிராம உத்தியோகத்தர் நிர்மலா சுரேஸ்குமார், சலோம் எஸ்டேட் பண்னையின் மேற்பார்வையாளர் சுபாஸ் வின்சன்ட் தங்கராஜா, பண்ணையின் பிரதி மேற்பார்வையாளர் தயாநிதி, கிரான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர் சிந்தம்பலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இஞ்சி விளைச்சல்
குறித்த பண்ணையில் நடப்பட்டிருந்த ஏற்றுமதிப் பயிரான இஞ்சி அதிகமாக விளைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்றுமதி விவசாய திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் கிளையினால் மட்டக்களப்பில் நடுகை பண்னுவதற்கு உகந்த பயிர்கள் என கமுகு, கொறுக்காய், இஞ்சி, மிளகு, மஞ்சள் போன்ற பயிர் வகைகள் இனங்கானப்பட்டுள்ள நிலையில் அடுத்த வருடம் கோப்பி பயிர்ச் செய்கையும் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






