மாரவில கடலில் மாயமான நபர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
மாரவில முதுகட்டுவ கடலில் மூழ்கி காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மாரவில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொபேஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த திங்கட்கிழமை 18ஆம் திகதி பிங்கிரிய பகுதியிலிருந்து மாரவில பிரதேசத்திற்கு சுற்றுலா நிமித்தம் சென்ற சிலர் மாரவில முதுகட்டுவ பிரதேசத்திலுள்ள கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடலில் நீராடிக்கொண்டிருந்த போது சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி திடீரென காணமால் போனதையடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் கூக்குரலிட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு நின்றவர்கள் கடலுக்குள் சென்று சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், சில மணி நேரத்தின் பின்னர் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவனை மீட்பதற்காகச் சென்றவர்களில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அந்த சந்தர்ப்பத்தில் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு காணாமல் போன இளம் குடும்பஸ்தரை தேடி கடந்த இரண்டு நாட்கள் மீனவர்கள், கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளதாக மாரவில காவல்துறையினர் தெரிவித்தனர்.