கொரியாவில் வேலைவாய்ப்பு - ஒப்பந்தம் கைச்சாத்து
கொரிய கப்பல் கட்டுமான பணிகளுக்கு திறமையான தொழிலாளர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கங்காராம விகாரையின் ஸ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்திற்கும் கொரியன் கூல்லைஃப் நிறுவனத்திற்கும் இடையில் இன்று(10) இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது..
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில், சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் .ஹில்மி அஸீஸ், ஸ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்தின் ஆளுநர் சபையின் செயலாளர் பிரசாத் ஜயவீர, கொரியன் கூல்லைஃப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் யுங் லிம் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கொரிய மொழிப் பயிற்சி
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கொரிய கப்பல் கட்டும் தொழிலில் பணிபுரிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு, கப்பல் கட்டுமானத் துறையில் வெல்டிங் பணிகளுக்கு ஆரம்ப கட்ட பயிற்சியும், இரண்டாம் கட்டமாக கப்பல் பெயின்டிங் பயிற்சி மற்றும் மின்சாரப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றோடு, கப்பல் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புக்காக பயிற்சி பெறும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கொரிய மொழிப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கங்காராம விகாரையுடன் இணைந்த ஸ்ரீ ஜினரதன கல்வி நிறுவனம் பயிற்சிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதுடன், கொரியன் கூல்லைஃப் நிறுவனம் பயிற்சியை நடத்துகிறது.
அத்துடன், கொரிய பயிற்சியாளர்களும் இந்த நிறுவனத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெறும் அனைத்து சிறிலங்கா தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டைப் பெறுவதற்குத் தேவையான ஆதரவும், அவர்களை கொரிய கப்பல் கட்டுமானத் துறையில் வேலைகளுக்கு வழிநடத்த தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தொடர்புடைய பயிற்சி நடவடிக்கைகளின் தரத்தை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.