குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற துயரச் சம்பவத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ள முடிவு!
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றைய தினம் குறிஞ்சாக்கேணிக்கும் கிண்ணியாவிற்கும் இடையில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டிருந்த படகு சேவையால் பாடசாலை மாணவர்களின் உயிர்கள் பலியானதையடுத்து இன்று முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எம்.ஏ.உவைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்கவின் பணிப்புரைக்கமைய குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களை ஏற்றிச் செல்வதற்காக இன்று முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எம்.ஏ.உவைஸ் தெரிவித்தார்.
இச்சேவை தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் இடம்பெறவுள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்தார்.