தமிழர் மீதுமட்டுமன்றி சிங்களவர்களையும் பாதிக்கும் புதிய சட்டம் - போராட்டத்தில் மக்கள்!
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று திருகோணமலை மாநகர சபைக்கு முன்பாக இன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் பெருந்திரளான பெண்கள் பங்கேற்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த காலத்தில் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை மீறல்களை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நோக்கத்தோடு பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அதனை விட கொடிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருக்கின்றது என குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் எதிர்ப்பு
ஏற்கனவே உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மட்டுமின்றி ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்கள் மீதும் இறுதியாக அரகலய எனும் மக்கள் எழுச்சியில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள், மதகுருக்கள் மீதும் தனது பிடியை இறுக்கி இருந்தது.
இச்சட்ட மூலம் சட்டமாக்கப்பட்டால் மக்கள் இலங்கையில் அரசியல் அமைப்பின்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தமது உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டு நிறைவேற்று அதிகாரமிக்க அதிபரினதும் அவரது நீதித்துறை அதிகாரிகளது சர்வாதிகார ஆட்சிக்குள் நசிய வேண்டிய நிலை ஏற்படும் என்பதனையும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமைக்கு பாதிப்பு
இதன் போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள்,
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்,
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்,
சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு இசைவானதொரு சட்டத்தினை இயற்றுவதை அரசு பரிசீலிக்க வேண்டும், புதிய சட்டமான மனித உரிமை நியமங்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு அமைவானதாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பனவற்றை தாம் அரசாங்கத்திடம் கோருவதாகவும் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
