24 கரட் தங்க நாணயத்தில் ட்ரம்ப்பின் உருவம்: அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கரட் தங்க நாணயங்களை வெளியிட எடுக்கப்பட்டுள்ள முடிவிற்கு அந்நாட்டு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் 250 ஆவது விடுதலை நாள் பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட இருந்தது.
இந்தநிலையில், உயிருடன் இருக்கும் ட்ரம்பின் உருவம் நாணயங்களில் இடம்பெறக்கூடாது என்ற அமெரிக்கப் பெடரல் சட்டங்களுக்கு (Federal Law) முரணாக ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரி போலச் செயல்படுவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்கக் கவின்கலை
அமெரிக்கக் கவின்கலை ஆணையத்தின் ஒப்புதலுடன் தயாரிக்கப்படும் இந்த நாணயத்தில் ட்ரம்ப் கைகளைக் குவித்தபடி மேஜையில் சாய்ந்திருக்கும் உருவம் பொறிக்கப்படவுள்ளது.
இருப்பினும் இந்த நாணயங்கள் பொதுப் புழக்கத்தில் விடப்படாது என அமெரிக்கக் கருவூலர் பிராண்டன் பீச் (Brandon Beach) விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக 1926 ஆம் ஆண்டு 30 ஆவது அதிபர் கால்வின் கூலிட்ஜ் (Calvin Coolidge) இதுபோன்ற நாணயத்தை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரம்ப் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே தங்கள் முகங்களை நாணயங்களில் பொறித்துக்கொள்வார்கள், ஜனநாயகத் தலைவர்கள் அல்ல என ஜனநாயகக் கட்சியினர் சாடியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் தனது ஆளுமையைத் தனித்துவமாகப் பதிவு செய்ய ட்ரம்ப் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, தேச மாண்புகளுக்கு எதிரானது என்ற விமர்சனப் பார்வையைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |