உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வரைவை சமர்ப்பிக்க திட்டம் : அலி சப்ரி தெரிவிப்பு
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான இறுதி வரைவினை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான புரிதல்களை ஏற்படுத்தி நீண்டகாலமாக காணப்படுகின்ற முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
இதற்கமைய, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் இலக்காக அமைந்துள்ளதாக அலி சப்ரி கூறியுள்ளார்.
இந்த ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான வரைவை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த வரைவினை இறுதி செய்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.