விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு! சென்னை நீதிமன்றம் விடுத்த உத்தரவு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது சொத்து விவரங்களைக் குறைத்துக் காட்டியதாக எழுந்துள்ள முறைப்பாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விஜய் தனது வேட்புமனுவில் சுமார் ₹100 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைக் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மனுவை இன்று (20 ஏப்ரல் 2026) விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேட்புமனுவில் முறையான சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்காதது ஒரு தீவிரமான முறைகேடு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
விரிவான விளக்கத்திற்கு உத்தரவு
இதன்படி, இது தொடர்பாக விரிவான விளக்கத்தை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏற்கனவே அவரது தனிப்பட்ட விவாகரத்து வழக்கு தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது இந்தச் சொத்து முறைகேடு முறைப்பாடும் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளமை தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |