கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்! வெளியான பின்னணி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 கோடி (140 மில்லியன்) ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் போதைப்பொருட்களுடன் இலங்கை பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பயணிகளும் இன்று (18) காலை 9.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-403 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோகிராம் 562 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர்களின் ஆடைகளுக்கு மத்தியில் 28 பைக்கற்றுகளில் இந்த போதைப்பொருள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் மதுபானக் கடை ஊழியர் (23 வயது) என்றும், மற்றையவர் ஒரு நாடகக் கலைஞர் (30 வயது) என்றும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |