முல்லைத்தீவில் இரு கடற்றொழிலாளர்கள் மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம்
புதிய இணைப்பு
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று மாயமான இரு கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்
கடந்த சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில், கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு கடற்றொழிலாளர்களும், ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையே கரை திரும்பியிருக்க வேண்டும்.
இருப்பினும், நீண்ட நேரமாகியும் கடற்றொழிலாளர்களும் அவர்களது படகும் கரை திரும்பவில்லை.

இதனால் அச்சமடைந்த உறவினர்களும் சக கடற்றொழிலாளர்களும் இணைந்து, நான்கு படகுகளில் கடலுக்குச் சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த கடற்றொழிலாளர்களை கண்டறிந்து, பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரபட்டுள்ளனர்.
செய்தி - தவசீலன்
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு – கல்லப்பாடு பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகத் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் இருவரும் கடந்த (02.05.2026) ஆம் திகதி காலை கல்லப்பாடு கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், காணாமல் போன கடற்றொழிலாளர்கள் எதிர்பார்த்தபடி கரைக்குத் திரும்பாததால், காணாமல் போனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகளை
இதன்படி, குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் நேற்று முதல் சம்பந்தப்பட்ட கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இதுவரை தேடுதல் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில் மேலும் இன்று (04.05.2026) மீண்டும் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |